கோவை : கோவையில் வாலிபரை ஹெல்மெட் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி, மிரட்டி தங்க மோதிரம் மற்றும் Google Pay மூலம் ரூ.22,100 பணத்தை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு, பி.கே.டி நகரைச் சேர்ந்தவர் அபிஜித் விஸ்வம் (30). இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2-ம் தேதி இரவு தனது நண்பர் ரமேஷை பைக்கில் சென்று வழியனுப்பிவிட்டு, அபிஜித் விஸ்வம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சவுரிபாளையம் சுப்பையகோனார் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே சென்றபோது, அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் திடீரென ஹெல்மெட்டால் தாக்கி கீழே தள்ளியதுடன், பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர்.
மேலும், கொலை செய்து விடுவதாக மிரட்டி அவரது தங்க மோதிரத்தை பறித்துள்ளனர். தொடர்ந்து அவரது செல்போனில் இருந்து Google Pay மூலம் ரூ.22,100-ஐ தங்களது செல்போனுக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அபிஜித் விஸ்வம் நேற்று சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணம் மற்றும் நகையை பறித்தவர்கள் மிதிலேஷ், கிருத்திக் பாலாஜி மற்றும் கோவிந்த் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, 3 பேரையும் தேடி வருகின்றனர்.





