கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 700 கிராம் தங்கக்கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் க.க.சாவடி காவல்துறையினர், வாளையாறு சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி ஒரு கேரளா மாநில அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அந்தப் பேருந்தை நிறுத்தி, போலீஸார் சோதனை செய்த போது ஒரு பயணியின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் வைத்திருந்த உடைமைகளில் போலீஸார் சோதனை செய்ததில், 700 கிராம் எடை கொண்ட மூன்று தங்கக்கட்டிகள், வளையல்கள் ஆகியவை இருந்தது.
அவற்றின் மதிப்பு 9.34 லட்சம் என்றும் ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில், தங்கக்கட்டிகளை கொண்டு வந்தவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது(65) என்பதும் திருச்சூரில் சிறிய அளவில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்து நடத்தி வருவதும், நகைப்பட்டறையில் உருக்கிய பழைய தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால், 700 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பிடிபட்ட நபரை வருமான வரித்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். வருமான வரித்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




