கோவை: தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டி செயல்பட்டால் அவர்கள் அரசுப் பணியில் நீடிக்க முடியாது என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை விடுத்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படாததால், அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருந்தது.
இதுகுறித்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும், பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா நகர் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் கெம்பனூர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அண்ணா நகரிலிருந்து பொதுமக்களுடன் அரசு பேருந்தில் பயணம் செய்து கெம்பனூர் வரை சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், “அண்ணா நகர் மக்களின் நீண்டகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழக அரசு, அனைத்து மக்களுக்கும் சமமான அடிப்படை வசதிகளை வழங்க உறுதிபூண்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு, “கெம்பனூர் மக்கள் அளித்த மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து செல்லாத பகுதிக்கு இன்று அரசு பேருந்து இயக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கையை முதலமைச்சர் பாராட்டியுள்ளார்” என்றார்.
மேலும், “சமூக நல்லிணக்கமே இந்த அரசின் முக்கிய நோக்கம். மக்கள் நலப் பிரச்சினைகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக் கூடாது. எங்கு பிரச்சினை இருந்தாலும் அதிகாரிகள் தாமாக முன்வந்து தீர்வு காண வேண்டும்.
இனி அரசு அதிகாரிகள் சாதி பாகுபாட்டுடன் செயல்பட்டால் அவர்கள் அரசுப் பணியில் நீடிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் கூறும் சமத்துவக் கொள்கையை அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அமைச்சர் வன்னியரசு வலியுறுத்தினார்.





