கோவை: தகுதியுடைய இஸ்லாமிய சிறைவாசிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டம் கெம்பனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாதது நீண்டகால கோரிக்கையாக இருப்பதாகவும், அது நவீன தீண்டாமையின் ஒரு வடிவமாக கருதப்படுவதால் அரசு அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டதாகவும், அவற்றை நிறைவேற்றவும், நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
காந்திபுரம் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்து கோவை பொறுப்பு அமைச்சர் சம்பத்குமாருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், தகுதியுடைய சிறைவாசிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் எங்காவது இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
அதேபோல், “அண்ணன் வைகோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் நேசிக்கும். அவர் எந்தவிதமான விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர்மீதான எங்களின் மரியாதையும் நேசமும் தொடரும்,” என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.





