கோவை: உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கோவை ஹவிஷா மருத்துவமனையின் மருத்துவர்களும் பொதுமக்களும் இன்று ரத்த தானம் செய்தனர்.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வலர்கள் பலர் உலகம் முழுவதும் ரத்த தானம் செய்தும், இதன் அவசியம் குறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை சிங்காநல்லூரில் உள்ள ஹவிஷா மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில் அம்மருத்துவமனையின் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம் என்றால் முதலில் தானம் செய்ய வேண்டியது மருத்துவர்கள்தான் என்பதை உணர்த்தும் விதமாக, இன்று மருத்துவமனையின் பணியாளர்கள் அனைவரும் தங்களது ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஹவிஷா மருத்துவமனையின் மருத்துவர்கள் ஹரிஹர ஜோதி மற்றும் நிஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம். சிரமத்தில் இருக்கும் பொதுமக்களின் நலனுக்காக எங்கள் குழுவினரே ரத்த தானம் செய்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
ரத்த தானம் செய்தால் சத்து குறைந்துவிடும் என்று நினைப்பது தவறு. ஏனெனில் ஒரு யூனிட் ரத்தம் மட்டுமே தானமாக வழங்கப்படுகிறது. ரத்த தானம் செய்த பிறகு மீண்டும் ரத்தம் சுரக்கும். அதனால் அச்சப்படத் தேவையில்லை. உலகில் மிக முக்கியமான தானங்களில் ஒன்று ரத்த தானம். ஒரு உயிரைக் காப்பாற்றுவது நமது பொறுப்பு” என்றனர்.



Comments are closed.