கோவை : கோவை புலியகுளம் பகுதியில் மது குடித்ததாக கூறி அண்ணனை தம்பி கண்டித்தபோது ஏற்பட்ட தகராறில், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து அண்ணனை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன்கள் சுரேஷ் (35), அறிவழகன் (34). இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சுரேஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தம்பி அறிவழகன் அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சுரேஷ் தனது செலவுக்காக தம்பி அறிவழகனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அறிவழகன் ரூ.100 கொடுத்துள்ளார். அந்த பணத்தில் சுரேஷ் மதுபானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அறிவழகன், அண்ணன் சுரேஷிடம் மது குடித்தது மற்றும் வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்து கேட்டு சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அறிவழகன் வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சுரேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சுரேஷுக்கு காயம் ஏற்பட்டது.
சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுரேஷை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அறிவழகனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை புலியகுளத்தில் ரூ.100 கொடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை ராமநாதபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





