கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஒரே நாளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின்படிபொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில்மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) இணைந்து செல்வபுரம் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கான சிறப்பு வெறிநோய் (Anti-Rabies Vaccination-ARV) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகராட்சி சார்பில் நேற்று ஒரே நாளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர்கள் களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மனிதாபிமான முறையில் தெருநாய்களைப் பிடித்து.
தடுப்பூசி செலுத்திய பின்னர், அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடுவித்தனர். தெருநாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வெறிநோயை தடுப்பதற்காக, மாநகரம் முழுவதும் விரிவான தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதுஇதன் மூலம் நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, நடைபெற்று வருகின்றது.
மேலும், பொதுமக்கள் மற்றும் தெருநாய்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல், மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




