கோவை: கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில், தேசிய சேவை திட்டம் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) சார்பில், டிகேஎம்எஸ் (DKMS) இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து ரத்தப் புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
“We Delete Blood Cancer” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் நோக்கம், ரத்தப் புற்றுநோய் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஸ்டெம் செல் தானத்தின் அவசியம் மற்றும் தானதாரராக பதிவு செய்யும் எளிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைப்பதாகும்.
கற்பகம் உயர்கல்வி அகாடமியின் விரிவாக்கத் திட்ட இயக்குநரும், ஒருங்கிணைப்பாளருமான தர்மராஜ் இந்த நிகச்சியில் வரவேற்புரை வழங்கினார். புற்றுநோய் ஆராய்ச்சி மையத் தலைவர் மற்றும் உயிர்வேதியியல் இணைப் பேராசிரியரான ஸ்ரீதர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Also Read: கேஸ் சிலிண்டர் வெடிப்பு- துடியலூர் அருகே பரபரப்பு…
டிகேஎம்எஸ் இந்தியா அறக்கட்டளையின் தானதாரர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளரான பெட்ரிகா எடின் பிரவுன் சிறப்பு உரையாற்றினார். இந்தியாவில் ஸ்டெம் செல் தானதாரர்களின் தேவை அதிகமாக இருப்பதையும், பல ரத்தப் புற்றுநோய் நோயாளிகளுக்கு பொருந்தக்கூடிய ஸ்டெம் செல் தானதாரர் கிடைப்பதே உயிர் காக்கும் ஒரே வாய்ப்பாக இருப்பதையும் அவர் விளக்கினார். இந்தியாவில் தற்போது வெறும் 0.04 சதவீதம் பேர் மட்டுமே ஸ்டெம் செல் தானதாரர்களாக பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஸ்டெம் செல் தானதாரர் பதிவு முகாம் நடைபெற்றது. டிகேஎம்எஸ் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் இணைந்து, வெறும் 5 நிமிடங்களில் கன்னத்தின் உட்புறத்தில் இருந்து மாதிரி (Cheek Swab) சேகரித்து பதிவு செய்யும் முறையை செயல்படுத்தினர்.
இந்த எளிய பதிவு, ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள் ஸ்டெம் செல் தானத்திற்கு தேவையான தகுதிகள், தானதாரர் தேர்வு நடைமுறை மற்றும் தானத்திற்குப் பிறகான பராமரிப்பு குறித்து கேள்விகள் எழுப்பினர். அவற்றுக்கு நிபுணர்கள் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவில், நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் எம். குழந்தைவேல் நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மராஜ், குழந்தைவேல் மற்றும் மருந்தியல் துறை உதவிப் பேராசிரியர் பிரேம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.





