கோவை: “நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை” என்ற முழக்கத்துடன், கோவை குறிச்சி குளத்தில் ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders Foundation) அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று காலை முதல் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். குளத்தின் கரை மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றினர்.
குறிச்சி குளத்தை பாதுகாக்கும் முயற்சி:
கோவை மாநகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக உள்ள குறிச்சி குளத்தை பாதுகாப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தூய்மை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பணியில், கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
காலை முதலே குளத்தின் கரைப்பகுதிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மேலும், குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரைகளையும் தன்னார்வலர்கள் அகற்றினர்.
“நீர் நிலைகளை பாதுகாப்பது நமது கடமை”:
தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், இயற்கை வளம் நிறைந்த கோவையின் நீர்நிலைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என தெரிவித்தனர்.
“நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை” என்ற நோக்கத்துடன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே எதிர்பார்க்காமல் சமூகப் பொறுப்புடன் இளைஞர்கள் களமிறங்கும்போது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், நீர்நிலைகளில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான சுற்றுச்சூழலை விட்டுச் செல்வது அனைவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினர்.
பொதுமக்கள் பாராட்டு:
காலை முதலே இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து குறிச்சி குளத்தை தூய்மைப்படுத்தியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினரின் முயற்சியை வெகுவாக பாராட்டினர்.
நீர்நிலைகளை பாதுகாக்கும் இதுபோன்ற சமூகப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.





