கோவை: கோவையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன ஆண் குழந்தை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அரிசிபாளையம் அருகே சாலையோரம் பிறந்து ஒரு மணி நேரமே ஆனா ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை வீசி சென்றது யார்? என்று காவல்துறை விசாரணையை துவக்கி உள்ளனர்.
கோவை மாவட்டம் அரிசிபாளையம் மூலக்கடை வீதியைச் சேர்ந்த ஜோதிமணி, என்பவர் வழக்கம் போல் இன்று தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி கம்பெனி அருகே நடைபயிற்சிக்கு சென்றார்.
அப்பொழுது அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே அவர் அப்பகுதியில் தேடிய போது ஒரு ஆண் குழந்தை கிடந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர், உடனடியாக காவல் துறையினர் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தை என்பது தெரிய வந்தது.
இதை அடுத்து அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டு மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரதீபா நேரில் சென்று குழந்தைகளுக்கு தேவைக்கான முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து போத்தனூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்து குழந்தையை ரோட்டில் வீசி சென்றது யார் ? என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.





