கோவை : கோவை வேலாண்டிபாளையத்தில் புறா வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில், வாலிபர் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (23) மற்றும் உமாபதி (49) ஆகியோர் தங்களது வீடுகளில் புறாக்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், விஷ்ணு வளர்த்து வந்த புறா ஒன்று உமாபதியின் வீட்டில் உள்ள கூண்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது வீட்டிற்கு புறா அடிக்கடி வருவதாக கூறிய உமாபதி, விஷ்ணுவை அழைத்து புறாவை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஷ்ணு, உமாபதியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த உமாபதி வீட்டில் இருந்த மரக்கட்டையால் விஷ்ணுவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் விஷ்ணுவின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் உமாபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



