கோவை: டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக கோவையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும் மோசடிகளும் நடந்துள்ளதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
பல்வேறு இளைஞர்கள் போராட்டத்தின் பொழுது காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மத்திய கல்வித்துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
நீட் தேர்வு வினாத்தாள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படும் அவல நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று. வருவதாகவும் அந்த மாணவர்கள் மீது ராணுவம் மற்றும் காவல் துறையை ஏவி கடுமையான தாக்குதல் நிகழ்த்துவதாக தெரிவித்தனர்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு தங்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.





