கோவை : விஜய் சேதுபதி முதலமைச்சர் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்த சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் திமுக மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விஜய் சேதுபதிக்கு இப்போது மார்க்கெட் குறைகிறது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்து பேசினால் பரவாயில்லை.
அறுதி பெருமானின்மையில், மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற முதல்வரை ஜாடை மாடையாக பேசுவதில் என்ன இருக்கிறது? புரோகிராம் நன்றாக செல்ல வேண்டும் என்பதற்காக பேசுகிறாரா?
பிக் பாஸ் இப்போது யாரும் பார்ப்பதில்லை. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் சட்டமன்ற நிகழ்வுகளையே பார்க்கின்றனர். அந்த ஆற்றாமையில் விமர்சிக்கிறார்.
முதலமைச்சரை பேசுவதற்கு தகுதி வேண்டும். அரசியல் பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும். எதுவுமே தெரியாமல் பேசக்கூடாது.
விஜய் சேதுபதி பேசியது தவறு. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். விஜய் சேதுபதி செல்லும் இடத்தில் நாங்கள் நின்று கேள்வி கேட்போம்.
இவர் ஏதாவது நல்லது செய்திருக்க வேண்டும் அல்லது அரசியலில் நிற்க வேண்டும். எதுவுமே இல்லாமல் முதலமைச்சரை தாக்கிப் பேசலாமா?
எதுவுமே தெரியாமல் பேசி மாட்டிக்கக்கூடாது. தரமான விமர்சனங்களை வைக்கலாம். சட்டப்பேரவையில் முதல்வர் தரமான விமர்சனம் செய்தார்.
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னால், நிரூபி என்றுதான் சொல்வார்கள். நல்ல குற்றச்சாட்டுகளை வையுங்கள். ஆரோக்கியமாக இருந்தால் எடுத்துக் கொள்கிறோம்.
சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏவை தூக்கி விட்டதே எங்கள் முதலமைச்சர்தான்.
நான் திமுகவில் இருந்தபோது திமுக அமைச்சர்கள் என்னிடமே பணம் கேட்டார்கள். சட்டசபையில் இதனை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது கையில் பத்தாயிரம் ரூபாய் தான் இருக்கிறது என்றார். இதனை எப்படி எடுத்துக் கொள்வது? எம்எல்ஏக்கள் எப்படி லேண்ட்ரோவர் காரில் செல்கின்றனர்? நிரூபிக்க முடியாத விஞ்ஞான ஊழல் செய்தவர்கள் தான் திமுகவினர்.
ஸ்டாலினுடன் எனது வீட்டில் இருந்த புகைப்படத்தை நான் எப்போதோ அகற்றிவிட்டேன். இப்போது முதலமைச்சர் விஜயுடன் இருக்கும் புகைப்படம்தான் என் வீட்டில் உள்ளது.
இவ்வாறு கோவை சூலூர் எம்எல்ஏ சுகுமார் கூறினார்.





