கோவை: அசாமில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், VRF மற்றும் ELCE Medical Foundation சார்பில் பல்வேறு அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் இன்று Family Care அமைப்பின் மூலம் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, சுகாதாரம் மற்றும் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதில் 250 கிலோ பினாயில் கான்சன்ட்ரேட், 250 கிலோ பிளீச்சிங் பவுடர், 1,000 முகக்கவசங்கள், 10 கிலோ வாஷிங் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த நிவாரணப் பொருட்களை அங்குள்ள தன்னார்வலர்கள் பெற்றுக்கொண்டு, தேவையுள்ள பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையாக விநியோகம் செய்ய உள்ளனர்.
குறிப்பாக, சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான கிருமிநாசினி பொருட்கள், முகக்கவசங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்வில் ELCE Medical Foundation மற்றும் VRF நிறுவனங்களின் நிறுவனர்களான டாக்டர் ராஜன், டாக்டர் வித்யா ராஜன், Family Care அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ரேணுகா மற்றும் SVHP அமைப்பைச் சேர்ந்த திருமதி அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அசாம் மக்களின் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உதவிக்கு, அப்பகுதியில் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் உரியவர்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





