கோவை: பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சன்னிதானமாக இருந்து, தமிழ் மற்றும் சைவ சமயத்தைப் போற்றி பாதுகாத்து வந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 8-ம் ஆண்டு குருபூசை விழா பேரூரில் செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, பேரூர் ஆதீனத்தில் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதற்கட்டமாக யாகசாலை வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சாந்தலிங்க ராமசாமி அடிகளார் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பேரொளி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அடிகளாரை நினைவு கூர்ந்து வழிபட்டனர்.
விழாவுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்களைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தமிழ் மொழி மற்றும் சைவ சமயத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் விழா நடைபெற்றது. அவரது ஆன்மிகப் பணிகள் மற்றும் சமயத் தொண்டுகளை போற்றும் வகையில் பக்தர்கள் மரியாதை செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அருளிய ‘வைராக்கிய சதகம்’ நூல் வெளியிடப்பட்டது. அடிகளாரின் ஆன்மிக சிந்தனைகள் மற்றும் கருத்துகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நூல் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குருபூசை விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் அருளைப் பெற்றனர்.





