கோவை: குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள 260 பதற்றமான பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக
போலீஸ் கமிஷனர் கண்ணன் தெரிவித்தார்.
கோவையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் கடந்த கால குற்றப் பின்னணிகள், சம்பவங்கள் நடைபெற்ற நேரங்கள் (பீக் அவர்ஸ்) ஆகியவற்றை ஆராய்ந்து, குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள 260 பதற்றமான பகுதிகளை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:
பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள 260 பதற்றமான இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த 260 இடங்களிலும் ரோந்து வாகனங்களின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து வாகனங்கள் தங்களுக்குத் தோன்றிய இடங்களுக்குச் செல்லாமல், பட்டியலிடப்பட்ட பகுதிகளில், குறிப்பிட்ட நேரங்களில் கண்டிப்பாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் எங்கு இருக்கின்றன என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ‘ஜிபிஎஸ்’ தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இந்த அதிரடி திட்டத்தின் மூலம், ஏதேனும் அசம்பாவிதம் அல்லது குற்றம் நடந்தால், தகவல் கிடைத்த 4 முதல் 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ரோந்து வாகனங்களில் போலீசார் விரைந்து சென்று விடுகின்றன. போலீசார் பிரச்னைகளை விரைந்து கையாளுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளர். அதேபோல இந்த 260 இடங்களும் பதற்றம் இல்லாத சாதாரண இடமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


