எங்கள் கூட்டணி இவர்களுடன் தான்- கோவையில் சீமான் தெரிவிப்பு…

கோவை: கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை குறித்து ப.ப.மோகன் தொடர்ந்து சட்ட போராட்டங்களை முன்னெடுத்தி வருகிறார் நாங்கள் தொடர்ந்து அரசியல் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். அவர்களது விடுதலை குறித்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று முதல்வர் கூறுகிறார், ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட இரண்டு வருடங்கள் வெளியில் இருப்பவர்களை மறுபடியும் சிறையில் அடைப்பது தான் இந்த விவகாரத்தில் உள்ள சிக்கல் என்றும், மாநில அரசை அவர்களது விடுதலையை உறுதி செய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் கூறும் நிலையில் வெளியில் வந்தவர்களை மீண்டும் சிறையில் அடைப்பதற்கு என்ன தேவை உள்ளது என கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்த அவர் அதற்கு காரணமாக ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டதாக கூறுகிறார்கள் என்றும் அனுமதியை அவர்களுக்கும் கொடுங்கள் எனக்கும் கொடுங்கள் என்று தான் நான் கேட்கிறேன் என தெரிவித்தார். மேலும் இது குறித்து ஒரு ஆவணம் படம் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இதனைத் திரையிடுவதற்கு ஒரு மாநாடு நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மழை பாதிப்புகள் குறித்து அரசின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசு கூறுவதை நாம் நம்புவோம் நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் நீர்த்தேக்கங்களை பராமரிக்கவில்லை புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவில்லை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றும் இதையே எத்தனை வருடங்கள் பேசி கொண்டிருப்பது, ஆக்கிரமிப்பு இடியுங்கள் என்று கூறும் நீதிமன்றம், பல்வேறு அரசு அலுவலகங்கள், பல்வேறு விண்ணூர்தி நிலையங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தான் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சியினர் பயன்படுத்தி கைதானது குறித்தான கேள்விக்கு, எங்களை கைது செய்தவர்களே ஒருநாள் பிரபாகரன் படத்தை வணங்கும் காலம் வரும் முன்பெல்லாம் ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்தார்கள் ஆனால் தற்பொழுது அதெல்லாம் குறைந்து வருகிறது என தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்ததை எவ்வாறு பார்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பு எதற்கு இணையும் பொழுது பார்த்தேன் நீங்கள் எவ்வாறு பார்த்திர்களோ அப்படி தான் நானும் பார்த்தேன் என நக்கலாக பதில் அளித்தார். மேலும் அவர் மதிப்பிற்குரியவர் என்றும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். அதில் வேறு ஏதும் கருத்து சொல்ல இல்லை கூறினார். ஒவ்வொரு கட்சியும் பலத்தை அதிகரிக்க கூட்டணி வைக்கும் என்றும் ஆனால் என்னை பொருத்தவரை நான் கூட்டணி வைக்கவில்லை என தெரிவித்தார். நான் என்னை நம்பியுள்ள 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார். என்னுடைய வெற்றி என்பதும் எனக்கானது அல்ல என்னுடைய தோல்வி என்பதும் என்னுடையது அல்ல எனவே அதைப் பற்றி பேச வேண்டாம் என தெரிவித்தார்.

பட்டிமன்றத்தில் நடப்பது போன்று தான் ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சியை விமர்சிக்கிறது என தெரிவித்தார். திமுகவைப் பற்றி அதிமுக கூறுவது அனைத்தும் உண்மை அதிமுகவை பற்றி திமுக கூறுவது அனைத்தும் உண்மை திமுக சரியில்லை என்று அதிமுக கூறுகிறது அதிமுக சரியில்லை என்று திமுக கூறுகிறது ஆனால் நாங்கள் இருவரும் சரியில்லை உங்களை ஒழிப்போம் என்று கூறுகிறோம் என தெரிவித்தார்.

அண்மை காலமாக குற்றவாளிகளை சுட்டு பிடிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த ஒரு குற்றத்திற்கும் மரணம் தண்டனையாக இருக்கக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு என்றும் ஆனால் பாலியல் வன்கொடுமை படுகொலை இதற்கெல்லாம் மரணத்தை தவிர வேறு எதுவும் தண்டனையாக இருக்கக் கூடாது என்பதும் எங்களுடைய கொள்கை முடிவு என தெரிவித்தார். குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதும் குற்றங்கள் போற்றப்படுவதும் இந்த நாட்டில் உருவாகிவிட்டது என்றார். தெரிவித்த அவர் எத்தனை கொலை செய்தாலும் 90 நாட்களில் வெளியில் வந்து விடலாம் என்ற நிலைமை இருப்பதால் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாகி விட்டதாகவும் இதற்கெல்லாம் காரணம் போதை தான் என தெரிவித்தார். மேலும் இந்த குற்றத்தை எல்லாம் பிரசவிக்கும் தாயாக மது இருப்பதாகவும் கூறினார்.

போதைப் பொருட்கள் எல்லாம் விற்பதற்கு அனுமதி அளித்துவிட்டு குற்றவாளிகளை சுட்டு பிடிக்கிறேன் என்றெல்லாம் கூறினால் அதனை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார். சமூகம் திருட்டு சமூகமாக மாறிவிட்டது என தெரிவித்த அவர் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அமைச்சரவையில் பதவியில் இருப்பவர்கள் அதிகாரத்துடன் திருடுகிறார்கள் இவர்கள் அதிகாரம் இல்லாமல் திருடுகிறார்கள் என்றார்.

அண்மை காலமாக சீமான் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கோபப்படுவது குறித்தான கேள்விக்கு, கேள்வியை கேள்வியாக வைத்தால் பரவாயில்லை கேள்வியை கேட்கத் தெரியாமல் ஒரு கேள்வியை கேட்பது அதற்கு விளக்கம் கூறினால் மரியாதையாக பேசுங்கள் என்று கூறுவது என்று கூறினால் கோபம் வருமா வராதா என கேள்வி எழுப்பினார். நீங்கள் ஒழுங்காக இருங்கள் நான் ஒழுங்காக பதில் கூறுகிறேன் நல்ல கேள்விகளை முன் வைத்தால் நான் அழகான பதில்களை கூறுவேன் என தெரிவித்தார். எவ்வாறு பேச வேண்டும் எவ்வாறு மேடையில் பேச வேண்டும் என்று கற்றதெல்லாம் பின்னால்தான் ஆனால் எப்படி சண்டை செய்ய வேண்டும் என்பதை ஐந்து வயதில் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்தார். செய்தியாளர்கள் நீங்கள் என்னிடம் இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டோம் என்று வருத்தம் தெரிவியுங்கள் எனவும் தெரிவித்தார்.

கோவை மதுரை மெட்ரோ திட்டம் குறித்தான கேள்விக்கு, தனக்கு அந்தத் திட்டத்தில் உடன்பாடு இல்லை என்றும் 72 ஆயிரம் கோடி இதில் முதலீடு செய்யப்படுகிறது, இது பல்வேறு நாடுகளில் தோல்வி அடைந்த ஒரு திட்டம் என தெரிவித்தார். திடீரென விண்ணூர்தி நிலையம் கட்டுவது, பேருந்து நிலையம் விரிவாக்கம், திடீரென எட்டு வழி சாலை பத்து வழி சாலை அமைப்பது எல்லாம் எதற்கு என்று எனக்கு தெரிவதால் கேள்வி எழுப்புகிறேன் எனவும் எங்களை பொருத்தவரை இருக்கின்ற சாலைகளை நன்றாக பராமரிக்க வேண்டும், மெட்ரோ ரயில் கொண்டு வந்தால் எத்தனை பேர் அதில் பயணிக்க போகிறார்கள்? படிப்பதற்கு நல்ல பள்ளிக்கூடம் மருத்துவத்திற்கு நல்ல மருத்துவமனை எல்லாம் கட்டி தராமல் இருக்கிறார்கள் என விமர்சித்தார். பசியோடு இருக்கின்ற மக்களைப் பற்றி கவலைப்படாமல் பறக்கின்ற மக்களை பற்றி நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்தியா தமிழ்நாடு எல்லாம் கடன் பெற்றதை எல்லாம் யார் தலையில் சுமத்துவார்கள் எனவே எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை கருத்தும் கூறவில்லை என தெரிவித்தார்.

தனியார் முதலாளிகள் லாபம் ஈட்டும் தொழிலாக கல்வி மாறியதால் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை என்றார். தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக அரசு போக்குவரத்து தரம் உயர்த்தப்படுவதில்லை அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படுவதில்லை என தெரிவித்தார். அரசு பள்ளிகளில் தரம் குறைவதால் தான் அங்குள்ள குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு செல்கிறார்கள் என்றும் எனவே மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்று காரணம் காட்டி அரசு பள்ளிகளில் மூடுகிறார்கள் என தெரிவித்தார். கேரளாவிலும் டெல்லியிலும் பள்ளியின் தரம் உயர்ந்துள்ளதால் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். அரசால் கொடுக்க முடியாத ஒரு கல்வியை தனியார் முதலாளி கொடுப்பார் நல்ல மருத்துவத்தை கொடுப்பார் என்றால் அரசு தோற்றதாக அர்த்தம் எனவும் விமர்சித்தார்.

என்னிடம் ஆட்சியை கொடுங்கள் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா என்று பாருங்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்பதை எங்களுடைய சட்டமாக இருக்கும், அமைச்சர் முதல் அனைத்து அரசு அலுவலர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பது எங்களுடைய சட்டமாக இருக்கும் அப்படி இருந்தால் தரம் தானாக உயரும்.

தம்பி செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு தான் செல்கிறார், அரசு நடத்துகின்ற மருத்துவமனையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மக்கள் எவ்வாறு நம்பி செல்வார்கள் என தெரிவித்தார். மேலும் கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா என அனைவரும் என அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு தான் சென்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.

2026 தேர்தல் பற்றி கேள்விக்கு இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு சலுகைகளை அறிவிக்கும் வாக்குகளுக்கு காசை கொடுக்கும் என தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு எவ்வாறு இருக்கும் என்று கூறலாம் பசி இல்லாத நாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று கூறலாம் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று கூறலாம் இது புரியவில்லை என்றால் காட்சியாக நான் காட்டலாம் என தெரிவித்தார்.

தற்பொழுது திமுக தமிழக வெற்றி கழகம் குறித்து பல்வேறு கட்சியினரும் கருத்துகள் தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு மோதட்டும் மோதட்டும் என பதில் அளித்து சென்றார்

முன்னதாக சீமானிடம் இஸ்லாமிய சிறைவாசிகள் 13 பேர் பரோலில் வெளிவந்த நிலையில் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து சிறைவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ப.ப.மோகன் மனு அளித்து அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.