கோவை: பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் கல்வியாளர் பிரியா செந்தில் தலைமையில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் விதமாக கோயம்புத்தூர் ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3206 சார்பில் சர்வஜன பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்வியாளர் பிரியா செந்தில் கலந்துகொண்டு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

சாதிக்க வேண்டுமென்றால்
வாழ்வில் நீங்கள் எந்த நிலையை எதிர்கொண்டாலும் சரி, அது தேர்வாக இருக்கலாம், ஏதேனும் ஒரு போட்டியாக இருக்கலாம் அல்லது நீங்கள் சாதிக்க நினைக்கும் ஏதாவது ஒரு விஷயமாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு செயலை முடியாது என்று நினைக்கும் போதோ அல்லது, அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் போதோ நீங்கள் அதே இடத்தில்தான் நிற்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
செயலில் இறங்குங்கள்
உதாரணமாக மாடிப்படி ஏறும் முன், இத்தனை படிகளை எப்படி ஏறி மேலே செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தால் நீங்கள் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில் உங்களுக்கு பய உணர்வும் அதிகரிக்கும்.
இந்த பய உணர்வைப் போக்க வேண்டுமென்றால் நீங்கள் செயலில் இறங்க வேண்டும். தேர்வுக்கு பயமாக இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்காமல், நம்மால் முடியும் என்று நினைத்து தொடங்குங்கள்.

திட்டமிடுங்கள்
படிக்கும் போது திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இன்று நான் என்ன படிக்க வேண்டும்? எவ்வளவு படிக்க வேண்டும்? எந்த நேரத்திற்குள் அதனைப் படித்து முடிக்க வேண்டும் என்ற இலக்குகளை நிர்ணயித்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு சரியான பலனைக் கொடுக்கும்
என்று பிரியா செந்தில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சர்வஜனா பள்ளியின் செயலாளர் நாராயணசாமி, ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3206 அமைப்பின் தலைவர் ஹென்ரி அமல்ராஜ், RCC Royals தலைவர் மனோகரன், யூத் சேர் அபிஷேக், செயலாளர் வந்தியத் தேவன், சர்வஜனா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

