கோவை: கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே வாகன சோதனையின் போது அபராதம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதாக கூறப்படும் போக்குவரத்து காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவலர்கள் வழக்கமான வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தன் குடும்பத்தினரை தனது சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளார். அவரை வழிமறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம் விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுநர் விதிமீறலுக்கான அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்கிறேன் என்று கண்ணியமாகச் சொல்லி இருக்கிறார், இதற்கு அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த அந்த காவலர், “வாய மூடிட்டு போடா… கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா ? நீ சொல்றத நான் கேட்கவா ?” என்று ஒருமையில் அவரை அதிகாரமாக மிரட்டி உள்ளார்.
இதனை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த அங்கு இருந்த நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்.
அந்த வீடியோவில், “அபராதத்தை நீதிமன்றத்திலோ அல்லது ஆன்லைனிலோ கட்ட சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் இந்த காவலர், ‘நாங்கள் வைத்து இருக்கும் மெஷினில் தான் கட்ட வேண்டும்’ என்று அடாவடி செய்கிறார்” என அந்த நபர் வேதனையுடன் பதிவிட்டு உள்ளார்.
குடும்பத்துடன் வந்தவரிடம் கண்ணியம் பார்க்காமல், ஒருமையில் மிரட்டி அவரை அசிங்கபடுத்திய அந்த காவலரின் செயல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமானிய மனிதர்களிடம் சட்டம் பேசும் காவல்துறை, தங்கள் அதிகாரத்தை இப்படித் தவறாகப் பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் பலரும் அவரவர் ஆதங்கத்தை பலரும் வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், வரம்பு மீறி நடந்து கொண்ட அந்தப் போக்குவரத்து காவலர் மீது உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

