கோவை: குண்டு வெடிப்பு தினத்தையொட்டி கோவையில் நாளை 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், 4 துணை கமிஷனர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இன்று முதலே லாட்ஜ், ஒட்டல்கள், மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, சினிமா தியேட்டர்கள், ரயில் நிலையம், பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து இடங்களிலும் சோதனையும் நடத்தப்பட உள்ளது.
அதேபோல் கோவையில் உள்ள கோயில்கள், ஆலயங்கள், பள்ளி வாசல்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளையும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். அவர்களது உடமைகளையும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனது.
மேலும், கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து புறநகரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

