கோவை: உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற யானை மின் விளக்கை போட்டதும் பின்வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் வரப்பாளையம் பிரிவு பகுதியில் கார்த்திகேயன் என்பவரது தோட்டத்து வீட்டில் உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டிற்குள்ளே நுழைய முயன்ற நிலையில் மின் விளக்கே போட்டதும் பின்வாங்கியது சிசிடிவியில் பதிவாகிய நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை வரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தடாகம் அடுத்த வரபாளையம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கார்த்திகேயன் என்பவரது தோட்டத்து விட்டிற்குள் உணவு தேடி நுழைய முயன்றுள்ளது. அப்போது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மின்விளக்கை போடுள்ளார்.
அப்போது அந்த காட்டு யானை விளக்கு வெளிச்சத்திற்கு பயந்து பின்வாங்கி அருகில் இருந்த செடிகளை சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளது. இவை அனைத்தும் அவரது வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
காட்டுயானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவது தொடர்ந்து வருவதாலும் கோடைகாலம் வரவுள்ளதால் வனவிலங்குகளுக்கு வனப்பகுதிகளிலேயே உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

