கோவை: கோவையில் பழைய இரும்பு வாங்க வந்து, ஆளில் இல்லாத நேரத்தில் சைக்கிளை வியாபாரிகள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பழைய பொருட்களை வாங்குவது போல குட்டி யானை வாகனத்தில் வந்து, வீட்டின் முன் நின்று இருந்த சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கோவை புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நல்ல விலைக்கு வாங்கின் கொள்வதாக ஒலிபெருக்கி (Loudspeaker) மூலம் அறிவிப்பு செய்தபடி ஒரு நான்கு சக்கர வாகனம் மெதுவாக வலம் வந்தது.
அந்த வாகனத்தில் வந்த இருவர், அங்கே வீட்டின் முன்பு சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தனர். உடனே வண்டியை நிறுத்தி இறங்கிய அவர்கள் அங்குமிங்கும் நோட்டமிட்டனர்.
யாரும் தங்களைப் பார்க்கவில்லை என்பதை அறிந்த அவர்கள் இருவரும், அந்த சைக்கிளை அலேக்காக தூக்கி வண்டியில் வைத்து, விர்ரெனப் பறந்தனர்.
சிறிது நேரம் கழித்து வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது சைக்கிள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்த வீட்டின் கண்காணிப்பு கேமராவை (CCTV) ஆய்வு செய்த போது, பழைய பொருள் வாங்குவது போல் வந்தவர்களே சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், பழைய பொருள் வாங்க வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என அப்பகுதி மக்கள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து வருகின்றனர்.

