கோவை: SRB, DRB தேர்வு இறுதி பட்டியலை விரைந்து வெளியிட வேண்டுமென தேர்வு எழுதியவர்கள் முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை வந்துள்ள முதல்வரிடம் SRB, DRB தேர்வு எழுதியவர்கள் தேர்வின் இறுதிப்பட்டியலை வெளியிட்டு பணி நியமன ஆணைகளை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்து போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதில் SRB மற்றும் DRB கூட்டுறவு நிறுவனங்களில் காலி பணியிடங்களுக்கான தேர்வு எழுதியவர்கள் இறுதி பட்டியலை விரைந்து வெளியிட்டு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாநில மற்றும் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக SRB, DRB தேர்வுகள் நடத்தப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்கள் ஆகியும் தற்போது வரை தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது.
உயர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி இறுதி பட்டியல் வெளியிடப்படாமல் உள்ள நிலையில் அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து இறுதி பட்டியலை வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்காகவே பல ஆண்டுகளாக படித்து தேர்வு எழுதி காத்திருப்பதாகவும் தேர்தல் தேதி அறிவித்தால் பட்டியல் வெளியீடு பணி நியமான ஆணை வழங்குதல் மீண்டும் காலம் தாழ்த்தப்படும் என்று தெரிவித்துள்ள அவர்கள் இதனால் தங்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனர்.
எனவே முதல்வர் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்து தங்களின் கோரிக்கையான இறுதி பட்டியல் வெளியிட்டை விரைவில் அறிவித்து பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

