கோவை: கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொன்ற நண்பர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் சிவா(45). கட்டிட தொழிலாளி. இவரது நண்பர்கள் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பால்ராஜ்(32) மற்றும் சாயிபாபாகாலனியை சேர்ந்த விஜய பாரதி(27). 3 பேரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
வேலை முடிந்து அவர்கள் மது அருந்துவது வழக்கம். இதேபோல், கடந்த 9-12-2023ம் ஆண்டு மூவரும் சிவா வீட்டில் வைத்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மூவருக்கும் இடையே போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், சிவா, 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் பால்ராஜ் மனைவி குறித்து அவதூறாக பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிவாவை குத்த முயன்றார். அப்போது, விஜயபாரதி, சிவாவை நகராமல் இருக்க அவரை பிடித்து வைத்து கொண்டார்.
பால்ராஜ் கத்தியால் சரமாரியாக குத்தி சிவாவை கொலை செய்தார். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பால்ராஜ் மற்றும் விஜய பாரதியை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், இந்த கொலை வழக்கில் பால்ராஜ் மற்றும் விஜய பாரதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.

