கோவை: கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோனியம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு 04.03.2026 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, உக்கடம் ஒப்பணக்கார வீதி, பேரூர் ரோடு, ராஜ வீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி மற்றும் சலிவன் வீதி பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோவை மாநகர், அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா 04.03.2026 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சூழ்நிலைக்கேற்றவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன. மாற்றாக பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில் வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பெரிய கடை வீதி NH ரோடு, வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் ராஜா தியேட்டர் வழியாக சென்று உக்கடம் ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேத்துமாவாய்க்கால் செக் போஸ்ட் வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மருதமலை ரோடு, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதிக்கு வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன. மாற்றாக, தடாகம் சாலை, காந்தி பார்க், பொன்னையராஜபுரம் சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
உக்கடத்திலிருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக் போஸ்ட், சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம் சென்று தடாகம் சாலையில் செல்லலாம்.
சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜ வீதிக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் 04.03.2026-ம் தேதி காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.
தேர் திருவிழா நடைபெறும் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, K.G. வீதி ஆகிய சாலைகளில் 04.03.2026-ம் தேதி காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.
கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் மற்றும் கோனியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

