கோவை: கோவையில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களால் ஏற்பட்ட விபரீதத்தில் இரண்டு மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மதியம் கல்லூரி மாணவர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கல்லூரி வளாகத்திற்குள் கார்களில் அதிக சத்தம் எழுப்பியவாறு சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அங்கிருந்து மாணவ மாணவிகள் கண்டு களித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது ஜீப் வாகனத்தில் மாணவர்கள் வந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அருகில் நின்று அதனைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவிகள் இருவர் நூலிலையில் அங்கிருந்து நகர்ந்து உயிர் தப்பினர்.
இந்த காட்சிகள் மாணவர்கள் செல்போனில் பதிவான நிலையில் தற்பொழுது அவை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரிகளில் இது போன்று மாணவர்கள் சாகசங்களில் ஈடுபடுவதை கல்லூரி நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

