கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குத்துக்கலவரமாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை ஆர்.எஸ்.புரம் ஆர்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் நவீன் சந்து (33). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாபு (49).
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு, நவீன் சந்துவின் மனைவியை வீட்டு முன்பு உள்ள பகுதியை சுத்தம் செய்யும்படி கூறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நவீன் சந்துவிடம் மனைவி புகார் கூறியுள்ளார். உடனே நவீன் சந்து, பாபுவிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் நவீன் சந்துவுக்கு ஆதரவாக அதே பகுதியில் வசிப்பவர்கள் சேர்ந்து பாபுவின் வீட்டு உரிமையாளரிடம் அவரை வீட்டை காலி செய்து விட்டு செல்ல அறிவுறுத்தும்படி கூறியுள்ளனர். உடனே வீட்டு உரிமையாளரும் பாபுவிடம் நீங்கள் வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் பாபுவுக்கு நவீன் சந்து மற்றும் அவரது மனைவி மீது கோபம் ஏற்பட்டது. நேற்று பாபு, நவீன் சந்து வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பாபு, தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். இதில் நவீன் சந்துவுக்கு கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்தம் கொட்டிய நிலையில் அவர் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதன் பிறகு நவீன் சந்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நவீன் சந்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாபு, போலீசுக்கு பயந்து தனது கழுத்தில் ஸ்குரு டிரைவரால் தானே குத்திக்கொண்டு காயமடைந்தார்.
அவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

