கோவை: தமிழ்நாடு சிறுபான்மையினர் கடன் திட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம்-1ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம்-2ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.8,00,000 வரை இருக்க வேண்டும்.
திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20,00,000 வரை வழங்கப்படுகிறது. திட்டம்-2ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.3,00,000 வரை வழங்கப்படுகிறது.
சுயஉதவிக் குழுக் கடன் திட்டம்-1ன் கீழ் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 வரை ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம்-2ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்-1ன் கீழ் ரூ.20,00,000 வரை 3% வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவியருக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினைக் கலைஞர் கடன் திட்டம்) வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.
எனவே, சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயினர்கள் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
தனிநபர் கடன் திட்டம், சுயஉதவிக் குழுக் கடன், விராசாத் (கைவினைக் கலைஞர் கடன் திட்டம்) ஆகியவற்றிற்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை (கடன் தொகை ரூ.5,00,000க்கு மேல் இருப்பின்), வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது அசல் (Original), மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


