கோவை: கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வடவள்ளி பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்
பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
பாஜகவில் வெளி மாவட்டங்களில் இருந்து கூட இங்கு வந்து தேர்தல் களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதற்கு அ.தி.மு.க.வும் பாஜகவும் கைகோர்த்தாக வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் முடிவெடுத்தார்கள்.
கோவை என்பது தேஜ கூட்டணியின் பக்கம் என்பதை கடந்த தேர்தலில் காட்டினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திமுக ஆட்சிக்கு வந்தது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி இருந்தபோது மாதத்திற்கு மூன்று முறை டெல்லிக்கு செல்வார். எதற்காகவென்றால் முதலில் விருதுகள் வாங்கவும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து திட்டங்களைக் கேட்கவும் செல்வார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்த காலம் இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய் கோவைக்கு கிடைக்கப்பெற்றது. ஏழு குளங்கள் இந்த திட்டத்தில் புனரமைக்கப்பட்டன.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ராணுவ தளவாட மையத்தை கோவை, சேலம், ஓசூர் வரை நீட்டித்துக் கொடுத்தார் மோடி.
உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில்தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் இங்கு அந்த திட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். உலக தலைவர்கள் பிரதமர் மோடி எங்கள் நாட்டிற்கு வரமாட்டாரா என்று ஏங்குகின்றனர்.
நாம் பெட்ரோல், டீசல், கேஸுக்காக காத்திருக்கவில்லை. மோடி நம்மை கண் இமைபோல் காத்துக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட மோடியை கோ பேக் என்று சொல்லியும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எப்படி மோடி கொடுக்கும் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவார்கள்.
ரம்ஜான், கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்கிறாரா? இந்துக்களுக்கு விரோதமான கட்சி திமுக.
கோவில் குறித்தோ, சாமிகள் குறித்தோ உயர்வாக பேசியிருக்கிறார்களா? ஓட்டுக்காக இப்போது ஸ்டாலின் நாடகம் போடுகிறார்.
பாஜகவை பார்த்தால் அவருக்கு பயம்.
பெண்கள் பாதுகாப்பு மோசமாக உள்ளது. பகல் நேரத்தில் கூட பெண்கள் நடமாட முடியவில்லை. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று யாராவது சொல்ல முடியுமா?
திமுக அரசு தூக்கி எறியப்படாவிட்டால் நாம் வீட்டை விட்டு வெளியே போக முடியாது.
சாக்லேட், ஊசி என்று பல வடிவங்களில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளன.
தடுப்பூசியைக் கூட ஸ்டாலின் அரசு அனுப்பவில்லை. கோவையை பழிவாங்குகிறார்.
அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் போது மட்டும்தான் பாதுகாப்பாக தொழில் செய்ய முடியும். கடந்த இரண்டு நாட்களாக ஆயுதம் ஏந்திய கும்பல்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு ஓட்டுக்கு ரூ.2,500, ரூ.5,000 என்று கொடுக்கிறார்கள். ஸ்டாலின் அடித்த கொள்ளைப் பணம்தான் இது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதுதான் தேர்தல், ஆனால் ஓட்டுப்போட 5 நொடிகள் போதும். யோசித்து ஓட்டுப்போடுங்கள்.
கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் வேலை செய்வதில்லை. அந்த தேர்தலுக்கு வெள்ளிக் கொலுசு கொடுத்தார். அது மூன்றே மாதத்தில் பல் இளித்துவிட்டது. எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் இங்கு மலரப்போவது தாமரையும் இரட்டை இலையும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உத்தமபுத்திரனாக பார்த்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் இங்கு அனுப்பியுள்ளார்.
நம்மை நம் வீட்டில் கூட நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். எஸ்.பி. வேலுமணி மேம்பாலங்கள் கட்டினார். திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால் ஸ்டாலின் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டினார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தில் பாலாஜியின் கலெக்ஷன் ஏஜெண்டுகளாக உள்ளனர். அதையே இந்த தேர்தலில் செய்யப்பார்க்கிறார். எனவே அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவர் வானதி சீனிவாசன் பேசினார்
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“கோவை வடக்குத் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிடுகிறேன். இங்கு மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. உடல்நிலை சரியில்லாத காலத்திலும் எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்தனர். கமலஹாசன் கோவை தெற்கில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்.
அதனால், அவர் தெற்கு வடக்கிற்கு போட்டி என்று பேசுகிறார். கடந்த தேர்தலில் டிவியை உடைத்துவிட்டு நான்தான் முதலமைச்சர் என்றவர் தான் அவர். கோவை தெற்கு தொகுதியில் பணமே கொடுக்கவில்லை என்று கூறும் செந்தில் பாலாஜிக்கு செவாலியே விருது கொடுக்க வேண்டும்.” என்றார்.


