கோவை: PM Shri திட்டத்தை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மத்திய அரசு நாடு முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவற்றில் நவீன வசதிகளை கொண்டு வரும் வகையில் பிஎம்ஸ்ரீ எனும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தை தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் எதிர்த்து வருகின்றனர். அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்றும் அது இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தற்போது தீவிரம் காட்டி வரும் நிலையில் அதற்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திரண்ட 30க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அத்திட்டத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மத்திய அரசுக்கும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த திட்டம் என்பது இந்தி மொழியை திணிக்கும் செயல், மறைமுகமாக பாஜக ஊடுருவ முயற்சிக்கும் செயல் என தெரிவித்த அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள மாநில அரசும் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இது குறித்து பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் இந்தத் திட்டம் என்பது மறைமுகமாக பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் செயல் என்றும் இந்தியை திணிக்கும் செயல் என்றும் தெரிவித்தார்.
மேலும் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் திராவிட முன்னேற்ற கழகம் எவ்வாறு இந்த திட்டத்தை எதிர்த்து போராடியதோ அதுபோலவே எதிர்த்து இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்.


