கோவை: மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 13 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் உள்ள மதீனா நகர் பகுதியில் நேற்று காலை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அருகிலிருந்த ஆற்றோர நாணல் பகுதியில் இருந்து வெளியே வந்த மலைப்பாம்பு, ஒரு ஆட்டினை பிடித்து விழுங்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக என்டபிள்யூசிடி நிறுவனர் ஒயிட் பாபுவிற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஒயிட் பாபு தலைமையிலான மீட்பு குழுவினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த ஆட்டினை மீட்டனர். ஆனால் அந்த ஆடு ஏற்கனவே உயிரிழந்திருந்தது.

தொடர்ந்து நீண்ட நேரம் போக்கு காட்டிய ராட்சத மலைப்பாம்பை மீட்பு குழுவினர் பத்திரமாக பிடித்தனர். பின்னர் சுமார் 13 அடி நீளமுள்ள அந்த ஆண் மலைப்பாம்பை மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் முன்னிலையில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
VIDEO
பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பு கோத்தகிரி சாலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



