சென்னை: ஜூன் முதல் வாரத்தில் OTT தளங்களில் வெளியாக உள்ள முக்கிய படங்கள் மற்றும் அவற்றின் சாதனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.
JioHotstar- Dhurandhar 2: The Revenge
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்படமான “துரந்தர் 2: தி ரிவென்ஜ்” தற்போது OTTயில் வெளியாகத் தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கு பதிப்பை விட விரிவாக்கப்பட்ட எக்ஸ்டெண்டட் வெர்ஷன் வடிவில் வெளியாகிறது. இதில் கூடுதல் காட்சிகள், நீளமான ஆக்சன் சீக்வென்ஸ்கள் மற்றும் இதுவரை வெளியிடப்படாத காட்சிகள் இடம்பெற உள்ளன.
OTT வெளியீட்டு தேதி
“துரந்தர் 2: தி ரிவென்ஜ்” Raw & Undekha பதிப்பு ஜூன் 4 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியராக அறிமுகமாகிறது. ஜூன் 5 முதல் அனைத்து சந்தாதாரர்களும் படத்தை வழக்கமாக ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
சிறப்பு பிரீமியர் நிகழ்ச்சி
வெளியீட்டுக்கு முன் 30 நிமிட சிறப்பு Pre-show நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கலந்துரையாடல்கள், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் திரைமறைவில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறும்.
இயக்குனர் Aditya Dhar இயக்கி, எழுதி, இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ஆர். மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் ராகேஷ் பேடி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் கதை முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே தொடங்குகிறது. ரன்வீர் சிங் மீண்டும் ஹம்சா அலி மஸாரி கதாபாத்திரத்தில் திரும்புகிறார். முதல் படத்தில் தனது முக்கிய எதிரியான ‘Rehman Dakait’-ஐ வீழ்த்திய பிறகு, ஹம்சா கராச்சியின் லியாரி பகுதியில் “புதிய லியாரி கிங்” ஆக மாறுகிறார்.
அதிகாரம் பெற்ற பிறகு ஹம்சா தனது அடுத்த இலக்காக மர்மமான “Bade Sahab” மற்றும் 26/11 மும்பை தாக்குதலுடன் தொடர்புடையதாக காட்டப்படும் “Major Iqbal” என்பவரை குறி வைக்கிறார். அதே நேரத்தில், ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற இந்திய ரகசிய முகவர் எவ்வாறு ஹம்சா அலி மஸாரியாக மாறினார் என்பதையும் படம் பின்னோக்கி காட்டுகிறது. உளவுத்துறை அதிகாரி Ajay Sanyal இந்த மாற்றத்தின் பின்னணியில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
திரைப்படம் ஆக்சன், உளவு நடவடிக்கைகள், அரசியல் சதிகள் மற்றும் உணர்ச்சிமிக்க பின்னணியை இணைத்து நகர்கிறது. லியாரி பகுதியின் சித்தரிப்பு குறித்து விவாதங்கள் எழுந்தபோதும், அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மேயரும், பாகிஸ்தான் பத்திரிகையாளருமான ஒருவர் படத்தில் காட்டப்பட்ட பல அம்சங்கள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளன என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மை சம்பவங்களின் தாக்கம்
இந்த திரைப்படத் தொடர் 1999 ஆம் ஆண்டின் IC-814 விமானக் கடத்தல், 2001 இந்திய நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்ற நிஜ சம்பவங்களால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள்
துரந்தர் 2 உலக அளவில் ₹1812.15 கோடி வசூல் செய்து அனைத்து காலத்திலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ₹1374.15 கோடி வசூலித்த நிலையில், வெளிநாடுகளில் ₹438 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம்,
- உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்திய திரைப்படம்
- உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்தி திரைப்படம்
- இந்தியாவில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படம்
- அதிக வசூல் செய்த A சான்றிதழ் பெற்ற இந்திய திரைப்படம்
என்ற பல சாதனைகளை படைத்துள்ளது.
Netflix “29”
இயக்குனரும் எழுத்தாளருமான ரத்னகுமார் இயக்கிய சமீபத்திய திரைப்படமான “29” திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு OTTயில் வெளியாகத் தயாராகியுள்ளது. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் மே 8 அன்று வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
படத்தில் சத்யா என்ற 29 வயது இளைஞராக விது நடித்துள்ளார். வாழ்க்கையில் தனது அடையாளம், நோக்கம் மற்றும் தன் நிலை என்ன என்பது குறித்து குழப்பத்திலும், தேடலிலும் இருக்கும் சத்யாவின் வாழ்க்கை, விஜி (ப்ரீத்தி அஸ்ராணி) என்ற பெண்ணை சந்தித்த பிறகு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
தன்னம்பிக்கையில்லாமல் வாழ்க்கையின் குழப்பங்களில் சிக்கி தவிக்கும் சத்யாவுக்கு, விஜி ஒரு வழிகாட்டியாக மாறி நீண்ட நாட்களாக அவனை துரத்தி வந்த கேள்விகளுக்கு விடை தேட உதவுகிறாள்.
இந்த திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி முதல் Netflix தளத்தில் வெளியாகிறது.
படத்தில் மகேந்திரன், ஷெஹ்னாஸ் பாத்திமா, அவினாஷ் மற்றும் பிரேம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை “ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்” சார்பில் கார்த்திகேயன் தயாரித்துள்ளார். மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் ‘G-Squad’ நிறுவனங்களும் இப்படத்துடன் இணைந்துள்ளன.
படத்தின் இசையை Sean Roldan அமைத்துள்ளார்.


