கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் சர்வ சாதாரணமாக நடந்து சென்று, ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு பூட்டி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைக் கள்ளச்சாவி போட்டுத் திருடிச் சென்ற மர்ம நபரின் துணிகரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
நேற்று இரவு நேரத்தில் குளத்துப்பாளையம் தெருக்களுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வீதியில் சர்வ சாதாரணமாக உலா வந்து உள்ளார். பின்னர், அங்கு உள்ள வீடுகளின் வாசல்களுக்கு நேராகச் சென்று, வீட்டில் உள்ளவர்கள் தூங்கி விட்டார்களா என்பதை உற்றுப் பார்த்து மிகத் துணிச்சலாக நோட்டமிட்டு உள்ளார்.
அப்போது ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைக் கண்ட அந்த நபர், அதனை கள்ளச்சாவி பயன்படுத்தி பூட்டை உடைத்து பைக்கைத் திருடிக் கொண்டு தப்பி சென்று உள்ளார். காலையில் எழுந்து பார்த்த வாகன உரிமையாளர், தனது பைக் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதில், அந்த மர்ம நபர் மிகவும் கூலாக நடந்து வந்து, வீடுகளை நோட்டமிட்டு, பைக்கைத் திருடிச் செல்லும் பதற வைக்கும் காட்சிகள் அப்படியே பதிவாகி இருந்தது.
இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்கள் இடையே வைரலாகி வருகிறது.
இந்நிலையில், குளத்துப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் நள்ளிரவு நேரக் காவல் துறை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


