கோவை: கோவையில் நாளை நடைபெறும் நீட் மறுதேர்வில் 7,091 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். 15 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் நாளை நடைபெறும் நீட் மறுதேர்வை 7,091 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், தடையற்ற மின்சாரம் மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்வர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1.30 மணிக்குப் பிறகு எந்த காரணத்திற்காகவும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வர்கள் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு 011-40759000, 011-69227700 ஆகிய இலவச உதவி எண்களை தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வுக்கான கோவை நகர ஒருங்கிணைப்பாளரை 9582908951 என்ற எண்ணிலும், மாவட்ட நிர்வாகத்தை 63841 23073 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


