கோவை: மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கோவையில் மீன்களை வாங்க ஆர்வமுடன் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் வருடாந்திர மீன்பிடி தடைகாலம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததை அடுத்து, மீன்கள் வரத்து அதிகமாகி உள்ளது.
கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள மீன் அங்காடிக்கும் மீன் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தடைகாலம் முடிந்த பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று அதிகாலை முதலே உக்கடம் மீன் அங்காடியில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது.

கோவை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மார்க்கெட்டிற்குள் நுழைவதற்கே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டது.
வாடிக்கையாளர்களின் வாகனங்கள் மற்றும் மீன் ஏற்றி வந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், உக்கடம் மற்றும் அதன் முக்கிய இணைப்புச் சாலைகளில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

மீன் வரத்து அதிகரித்துள்ள போதிலும், மக்களின் தேவை மிக அதிகமாக இருந்ததால் உக்கடம் மார்க்கெட் இன்று காலை முதலே பெரும் பரபரப்புடன் இயங்கி வருகிறது.


