கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் தூக்கு கயிறு அணிந்து நூதன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இளநிலை மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாதிரி தூக்குக் கயிறு அணிந்து நூதன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய பாஜக அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும், 12-ம் வகுப்பு பொது தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் மாதிரி தூக்கு கயிற்றை கழுத்தில் அணிந்தவாறு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பறிப்பதாக இருப்பதாகவும் உயர்சாதியினர் மற்றும் பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும்பொழுது ஒவ்வொரு மாணவரும் தேர்ச்சி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி மதிப்பெண்களை பெற வேண்டும் என்று இருந்த நிலையில் இந்த நீட் தேர்வில் அவ்வாறு இல்லாமல் ஏதாவது ஓரிரு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலையை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர். மேலும் கோச்சிங் சென்டர் என்ற பெயரில் இந்த தேர்வு வணிகமயமாக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்தனர்.



