கோவை : கோவை கவுண்டம்பாளையம் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை இடையர்பாளையம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் திலீப் குமார் (25), தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், வழக்கம்போல் கிரிக்கெட் பயிற்சியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது தனது செல்போன் கிரிக்கெட் மைதானத்தில் தவறவிட்டதை உணர்ந்த அவர், மீண்டும் அதை எடுக்கச் சென்றுள்ளார். அந்த நேரத்தில், பி.&டி. காலனி அருகே சக்தி நகர் புதிய மரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திலீப் குமாரையும் போலீசார் நிறுத்தி விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், போலீசார் முன்னிலையிலேயே திலீப் குமாரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்களில் ஒருவர் திடீரென கூர்மையான இரும்புக் கம்பியால் திலீப் குமாரின் வலது காலில் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் அவரது காலின் மூட்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலைக் கண்ட போலீசார் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த திலீப் குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திலீப் குமார் அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருவதுடன், தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


