கோவை: மோசடி வழக்கு யார் மீது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் ஆனால் அவர்கள் தண்டனை பெற்றவர்களா என்று பார்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை தவெகவில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேறு, அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது வேறு என்றும், யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்; ஆனால் அவர் தண்டனை பெற்றவரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் பலே பதில் கொடுத்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கட்டணம் எல்லாம் செலுத்தி முடிந்து கல்லூரிகள் திறக்கப்படும் போது கேள்வி கேட்கிறீர்கள்” என்று அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,
முதல்வர் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அதை அவர் செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய யாரும் வற்புறுத்தவில்லை என்றும், யார் வற்புறுத்தினார்கள் என்று அவர் கூறினால் அதற்கு பதிலளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய கட்சியை எடப்பாடி பழனிசாமி கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருவதாக விமர்சித்தார்.
மற்றவர்களின் கருத்துகளை கேட்டு செயல்படுவதால்தான் ஒருவர் பின் ஒருவராக கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேறு, அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது வேறு என்றும், யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்; ஆனால் அவர் தண்டனை பெற்றவரா என்பதை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் தனியார் மருத்துவமனைக்காக பேசவில்லை என்றும், கோவை மெடிக்கல் சென்டர் தனது மைத்துனரின் மருத்துவமனை என்பதால் அங்குதான் சிகிச்சை பெறுவதாகவும் விளக்கமளித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வருவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என்றும், அதற்காக 100 ஏக்கர் நிலம் தேவைப்படுவதோடு, விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே இருந்தால்தான் திட்டம் வெற்றியடையும் என்றும் கூறினார்.
விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிலம் தேவைப்படுவதாகவும், அதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் நிலத்தின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளதாகவும், சென்னையை விட கூடுதலாக நில விலை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி மீது விசாரணை நடைபெறுமா என்ற கேள்விக்கு, விசாரணையில் யார் மூல காரணம் என்பது தெரியவரும்; அதன் பிறகே யார் மீது வழக்கு தொடர வேண்டும் என்பது முடிவு செய்யப்படும் என்றார்.
அதிமுகவில் இருக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை என சி.வி. சண்முகம் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டபோது, அதே கருத்தை எஸ்.பி. வேலுமணியும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கரூர் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக திமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது என்றும், வழக்கு தொடரப்பட்டால் அதற்கு அவர் பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார்.
துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதை முதல்வரின் கரூர் பயணத்துடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். முதல்வர் கரூருக்கு செல்வதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் தொடர் சோதனைகள் குறித்து கேட்கப்பட்டபோது, எந்தத் தவறும் நடைபெறக் கூடாது என்பதற்காக முதல்வர் கண்காணித்து வருகிறார் என்றும், ஒவ்வொரு துறையும் சரியாக செயல்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அரசுப் பணியிடங்களில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்கிறது என்ற நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், மத்தியில் பாஜக ஆட்சியில் யார் யாரை நியமித்தார்கள் என்ற பட்டியலை முதலில் வெளியிட வேண்டும் என்று கூறினார்.
தனியார் பள்ளி, கல்லூரிகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், உயர்கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் இரண்டு முதல் மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கூடுதல் மதிப்பீடுகளுடன் டெண்டர் விடப்பட்ட விவகாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் கூறினார்.
காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகே தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும், அமைச்சர் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளின் கட்டண வசூல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கட்டணம் எல்லாம் செலுத்தி முடிந்து கல்லூரிகள் திறக்கப்படும் போது கேள்வி கேட்கிறீர்கள்” என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
புதிய அரசு பொறுப்பேற்று 55 நாட்கள்தான் ஆகியுள்ளதாகவும், ஆறு மாதங்கள் பொறுத்திருந்து அரசின் செயல்பாடுகளைப் பாருங்கள் என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது துறையில் தவறுகள் கண்டறியப்படும் இடங்களில் தேவையான மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


