கோவை: கோவையில் பல லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக விற்க முயன்ற, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையின் போது, அரசிடம் உரிய அனுமதி பெறாமலும், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து புரோமெதசைன்,ஹைட்ரோகுளோரைடு மற்றும் பென்டாசோசின் லாக்டேட் குப்பிகள் (Promethazine Hydrochloride & Pentazocine Lactate): 1,200 குப்பிகள் (Vials)
நைட்ராசெபம் (Nitrazepam) மாத்திரைகள்: 100 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த போதை மருந்துகளை கடத்தி வந்த தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மானிடம், இந்த மருந்துகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார்? என்பது குறித்து உக்கடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


