கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செம்மொழி பூங்காவில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.40 கோடி முறைகேடு குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது.
மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவது குறித்து, அதற்கான முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டலத் தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு கேள்வி எழுப்பினார்.
Also Read: உலா வரும் காட்டுப் பன்றிகள்… அச்சத்தில் வடவள்ளி மக்கள்- video
இதனைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்களும் ஆணையர் கட்டா ரவி தேஜா முன்பாக நின்று விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள், மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு, செம்மொழி பூங்காவில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரம் குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேநேரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள், குடிநீர் வழங்கக் கோரி, காலி குடங்களுடன் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாமன்ற கூட்ட அரங்கில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், தி.மு.க. பெண் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளுவாக மாறியது.
Also read: மதுப் பழக்கத்தால் சிதைந்த குடும்பம்; 1 வயது குழந்தையை தவிக்கவிட்டு விஷம் குடித்த தம்பதி
தி.மு.க. பெண் கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படும் நிலையில், அதையும் மீறி காயத்ரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் மாமன்ற கூட்டத்தில் அமளி தொடர்ந்து நீடித்ததால், கூட்டத்தை மதியம் 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை இரண்டு மாத காலத்திற்கு பணியிடை நீக்கம் செய்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற தொடர் வாக்குவாதம், தள்ளுமுள்ளு மற்றும் பணியிடை நீக்க நடவடிக்கை காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.





