கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி, காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் வெறும் ஒரு மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் காவல்துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம், மனோஜ் நகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது மாணவி, மாலையில் யாரிடமும் தெரிவிக்காமல் வெளியேறிச் சென்றது குறித்து அவரது குடும்பத்தினர் இரவு 7 மணி அளவில் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், துணைக் கண்காணிப்பாளர் கரிகால்பாரி சங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், மாணவி கரூர் செல்வதற்காகப் பேருந்து ஏறியது தெரியவந்தது.
உடனடியாக காவல்துறையினர், கரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மாணவியை, புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பத்திரமாக மீட்டனர். துரிதமாகச் செயல்பட்டு மாணவியை மீட்ட சூலூர் காவல்துறையினருக்குப் பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.





