கோவை: காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற தனது குழந்தைக்கு, ரத்தம் செலுத்தப்பட்ட பின்னர் HIV பாதிப்பு ஏற்பட்டதாக தந்தை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை எனக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயது தந்தை நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இதில், முதல் இரண்டு குழந்தைகள் இரட்டையர்களாக பிறந்துள்ளனர். அதன்பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு 3-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கடந்த 2018-ம் ஆண்டு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அதன்பிறகு குழந்தையின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தந்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக, குழந்தையின் காது அருகே திடீரென கட்டிகள் ஏற்பட்டதாகவும், இதனால் சந்தேகமடைந்து பரிசோதனை செய்தபோது, குழந்தைக்கு HIV பாதிப்பு இருப்பது தெரியவந்ததாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும், குழந்தையின் தாயார் மற்றும் மற்ற குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்தபோது, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்ததாக தந்தை தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று நியாயம் கேட்டதாகவும், ஆனால் இந்த விவகாரத்தை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என தங்களிடம் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாகியும் தங்களது குழந்தைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் கூறி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தந்தை மனு அளித்தார்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில்,
“திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கூறியதால், மேல் சிகிச்சைக்காக குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அங்கு ரத்தம் ஏற்றிய நிலையில், எனது குழந்தையின் காது அருகே திடீரென கட்டிகள் ஏற்பட்டன.
இதனால் சந்தேகமடைந்து பரிசோதனை செய்தபோதுதான், குழந்தைக்கு HIV பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், எனது மனைவி மற்றும் மற்ற குழந்தைகளுக்கு பரிசோதனை செய்தபோது எந்தப் பாதிப்பும் இல்லை.
எங்களுக்கு பிறந்த குழந்தை காய்ச்சலுக்காகத்தான் மருத்துவமனைக்குச் சென்றது. இன்று அந்தக் குழந்தையின் வாழ்க்கையே மாறிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக மனவேதனையுடன் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை.
எனது குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய விசாரணை நடத்தி, எங்களுக்கு நியாயமும், நிவாரணமும் வழங்க வேண்டும்” என்றார்.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், பாதிக்கப்பட்ட குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும், பின்னர் அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காய்ச்சலுக்காக மருத்துவமனைக்குச் சென்ற குழந்தையின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கான உண்மை என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தற்போது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





