எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் மோதல்; சவுகார் ஜானகியின் மறுபக்கம்

கோவை: பழம்பெரும் முன்னணி நடிகை சவுகார் ஜானகி இன்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். வறுமையின் சூழலில் இருந்த அவர் திரைத்துறையில் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவரது சினிமா வாழ்க்கை பற்றிய தொகுப்பை இன்று காணலாம்.

Advertisement

கடந்த 1931ம் ஆண்டு டிச., 12ம் தேதி தற்போதைய ஆந்திராவின் கலாச்சார தலைநகராக விளங்கும் ராஜமுந்திரி நகரில் பிறந்தார். சங்கரமஞ்சி ஜானகி என்பது என்பவது இவரது இயற்பெயராகும். ராஜமுந்திரியில் பிறந்திருந்தாலும், தந்தையின் காகித ஆலை தொழில் காரணமாக, பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து வாழ வேண்டிய சூழல் இருந்து வந்தது.

அப்படி சென்னையில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த காலகட்டத்தில் சாரதா வித்யாலயாவில் படித்து வந்தார். தன்னுடைய சிறு வயது முதலே, வானொலியில் ஏற்பட்ட கலை ஆர்வத்தினால், குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன்பிறகு, சென்னை ஆல் இண்டிய ரேடியோவில் நாடகக் கலைஞராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றி வந்த நிலையில், அவரது நாடகத் திறமையினால் வெள்ளித்திரையில் வாய்ப்பு கதவை தட்டியது.

திரைப்படம் தொடர்பாக ஜானகியை அணுகிய பட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, தன்னுடைய படத்தில் நடிக்குமாறு அவரை கேட்டார். ஆனால், திரைப்படத்தில் நடிப்பதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. மாறாக, அவரை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, அவர் விஜயவாடாவுக்கு குடிபெயர்ந்தார்.

Advertisement

இதனால், அவருடைய சினிமா கனவு தகர்ந்து போய்விட்டதாக உணர்ந்தார். இந்த சூழலில் தான் சினிமா மீண்டும் அவரை அழைத்தது. அதாவது, திருமணத்திற்கு பின்பு கணவருடனான வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். இதனால், அவர் குடும்ப நலன் கருதி சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை பல பேட்டிகளில் அவரே சொல்லியும் உள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில் கர்ப்பமுற்றார் ஜானகி. அவருக்கு குழந்தையும் பிறந்தது. வந்த வாய்ப்பை நிராகரித்த அவருக்கு, சினிமா வாய்ப்பு தேடி அலைய வேண்டிய சூழல் உருவானது. அந்த காலத்தில் குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் நடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால், குடும்பத்தின் ஏழ்மை நிலை அவரை சினிமா பக்கம் தள்ளியது.

Advertisement

கைக்குழந்தையுடன் சென்னை வந்து படத்தில் நடிக்க தயாரிப்பாளர்களை அணுகினார். திருமணமானாலே ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதானது என்ற நிலையில், குழந்தையுடன் சேர்ந்து சினிமா வாய்ப்பு கேட்பதில் அவருக்கு தயக்கம் இருந்தது. இப்படிபட்ட சூழலில் தான், தன்னுடைய குடும்ப சூழ்நிலை குறித்து எடுத்துக் கூறிய பிறகு, தனக்கு கிடைத்த அட்வைஸ் தான், தன்னுடைய வாழ்க்கையை மாற்றியதாக பல இடங்களில அவர் கூறியுள்ளார்.

1950ம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் எல்.வி.பிரசாத் இயக்கிய ‘சவுகாரு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்தது. இதன்மூலம், தன்னுடைய முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் ஆதரவை திரட்டினார். தன்னுடைய முதல் படமான சவுகாரு, நாளடைவில் அவரது அடையாளமாக மாறியது. சங்கரமஞ்சி ஜானகி என்ற அவரது இயற்பெயர், சவுகாரு ஜனாகி என்று மாறியது. உலக ரசிகர்களின் மனதிலேயும் அப்படியே இடம்பிடித்தார்.

சவுகாரு படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த தமிழ் மொழியின் முதல் படமான வளையாபதி, சவுகார் ஜானகிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அந்தப் படத்தில் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க வசனங்களைப் பேசி நடித்திருந்தார். இதன் காரணமாக, ஏவிஎம், ஜெமினி போன்ற முன்னணி நிறுவனங்களின் படங்கள் சவுகார் ஜானகிக்கு குவிந்தன. படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும், பாலும் பழமும், புதிய பறவை, பாமா விஜயம், எதிர்நீச்சல், இருகோடுகள் என தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்தார்.

ஆரம்பத்தில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் போன ஜானகி, தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடிவு செய்தார். இதன் காரணமாக, ரொமேன்டிக், கம்பீரம், காமெடி என பல்வேறு குணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கத் துவங்கினார். உயர்ந்த மனிதன் படத்தில் சமூக அந்தஸ்து கொண்ட பெண்ணாகவும், படிக்காத மேதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அப்பாவி மனைவியாகவும் நடித்திருந்தார். பாமா விஜயம், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கினார்.

சினிமாவில் அப்போது அறிமுகமான ரஜினியின் முல்லும், மலரும் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். என்.டி.ராமாராவ், சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், சிவக்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். கடைசியாக நடிகர் சந்தானம் நடித்த படத்திலும் சவுகார் ஜானகி நடித்திருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார்.

நடிகையாக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட சவுகார் ஜானகி, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த காவியத் தலைவி படத்தை தயாரித்து, அதே படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்திருந்தார்.அதேபோல, ரங்கராட்டினம் என்ற படத்தையும் தயாரித்திருந்தார்.

சினிமாத்துறையில் மிகவும் துணிவுடன் செயல்பட்ட நடிகையாக சவுகார் ஜானகி வலம் வந்தார். அதாவது சினிமாவின் முக்கியத் தூண்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் ஒளிவிளக்கு படத்தில் நடித்திருந்தார். அப்போது, பெயர் இடம்பெறுவதில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசனிடம் தனது உரிமைக்காக ஜானகி குரல் கொடுத்தார். அதேபோல, சக நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்த போது, அதில் தவறான சித்தரிப்பு இடம்பெற்றிருந்ததாக நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தார். அதுமட்டுமில்லாமல், சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும் போதும், வரும்போது, தனக்காகவும் வரவு, செலவுகளை அவரே செய்து வந்துள்ளார்.

சினிமாவின் ஒரு தூணாக விளங்கி வந்த சவுகார் ஜானகி பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். கலைமாமனி விருது, நந்தி விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் நாள் சாதனையாளர் விருதுகளையும், பட்டங்களையும் வென்றார். அதேபோல, 2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வழங்கிய மத்திய அரசு கவுரவித்தது.

தென்னிந்திய சினிமாவின் பல தலைமுறைகளை கண்ட சவுகார் ஜானகி தன்னுடைய 94வது வயதில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வரும், திரையுலகைச் சேர்ந்தவருமான விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில்; பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சவுகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

சவுகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் 70 ஆண்டு கால வரலாற்றை தன்னுடைய நடிப்பால் சுமந்து சென்ற லிஜென்ட் விடைபெற்றுள்ளார். அவரது மறைவுக்கு NCC மற்றும் நமது ஃபாலோவர்கள் சார்பிலும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

Amazon Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

என்ன, அடுத்து கல்யாணம் தான்… கொளுத்திப் போட்ட பிரபல நடிகை

விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பிரபல நடிகை தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழக அரசியல் சூழலில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...