கோவை: கடந்த இரு தினங்களில் வெளியான மற்றும் அடுத்த வாரம் வெளியாகப் போகும் ஓடிடி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பற்றி தற்போது காணலாம்.
காலம் மாற மாற சினிமாவின் அத்தியாயமும் மாறிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் தியேட்டர்களில் வரும் படங்களுக்கே வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது அதற்கு இணையாக ஓடிடி படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், தியேட்டர்களுக்கு வராமலே, ஓடிடியிலேயே வெற்றி அடைந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்சார் கட் பிரச்சினை இல்லாததால், கவர்ச்சி மற்றும் ஆபாச வார்த்தைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் தாராளமாக இருக்கின்றன. இது இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கங்கனா
அந்த வகையில் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் நடித்த ‘பாரத் பாக்ய விதாத்தா’ என்ற படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது நடந்த, இதுவரை சொல்லப்படாத ஒரு கதையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், ஆகஸ்ட் 14ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் தபாடியா இயக்கில் உருவாகியுள்ள இந்த த்ரில்லர்-டிராமா திரைப்படம், மும்பை காமா மற்றும் அல்ப்ளெஸ் மருத்துவமனையில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களின் துணிச்சலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது நோயாளிகளைப் பாதுகாக்கத் தங்கள் உயிரையும் பணயம் வைத்த அவர்களின் கதையை இது பேசுகிறது. கங்கனா ரனாவத்துடன் கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தம்பே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம், பயங்கரவாத தாக்குதலின் போது, சாதாரண மக்களிடம் வெளிப்பட்ட வீரதீர செயலை வெளிக்காட்டியுள்ளது.
26/11 மும்பை தாக்குதலின் போது நடப்பதாக அமைக்கப்பட்ட ‘பாரத் பாக்ய விதாத்தா’, போர்க்களத்தை விட்டு விலகி காமா மற்றும் அல்ப்ளெஸ் மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறது. தங்களைச் சுற்றி பயங்கரவாத தாக்குதல் நிலவியபோதிலும், நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதைத் தொடர்ந்த செவிலியர்கள், வார்டு பாய்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களின் கதையை இத்திரைப்படம் மையமாகக் கொண்டுள்ளது.
தகுதியான படம்
இந்தப் படம் குறித்து நடிகையும், தயாரிப்பாளருமான கங்கனா ரனாவத் கூறுகையில், “போதுமான கவனம் பெறாத கதைகளை வெளிக்கொண்டு வருவதால் இதுபோன்ற படங்கள் மிக முக்கியமானது. சில கதைகள் வெளிவரத் தகுதியானவை என்பதால் அவை வெளிக் கொண்டு வரப்படுகிறது.’பாரத் பாக்ய விதாத்தா’ அப்படிப்பட்ட ஒரு படம் தான். மருத்துவ பணியாளர்களின் தைரியம் புகழுக்காக உருவானதல்ல, மாறாக அவர்களின் அசைக்க முடியாத கடமையுணர்ச்சியாலும் இரக்கத்தாலும் உருவானது,” என்று கூறினார்.
வரிசை கட்டி நிற்கும் படங்கள்
அதேபோல, கடந்த இரு தினங்களில் மட்டும் தமிழ் மட்டும் ஹிந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களும், வெப் சீரியஸ்களும் வெளியாகியுள்ளன. தமிழ் மிஸ்டரி த்ரில்லரான ‘வதந்தி சீசன் 2’ முதல் ‘தி சூப்பர் மரியோ கேலக்ஸி மூவி’ வரை சுமார் 9 படங்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்த வார இறுதியை கழிப்பதற்கு நல்ல பொழுது போக்காக இந்தப் படங்கள் அமையும்.
வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி – சீசன் 2
பிரைம் வீடியோவில் நேற்று வெளியான இந்தத் தொடர் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இந்தத் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர், குற்றம், விசாரணை மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் அடங்கிய மற்றொரு மர்மத்துடன் மீண்டும் வருகிறது. ஒரு பிடிவாதமான காவல் அதிகாரி ஒரு சிக்கலான வழக்கை விசாரிப்பதை இந்தத் தொடர் பின் தொடர்கிறது.
இதயம் முரளி
தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், நேற்று Net flix இல் வெளியானது. அதர்வா முரளி, பஹத் பாசில் மற்றும் காயடு லோஹர் நடித்துள்ள இந்த தமிழ் ரொமாண்டிக் காமெடி திரைப்படம், ஒரு இளைஞனின் காதல், உறவுகள் மற்றும் நினைவலைகள் நிறைந்த உணர்வுப்பூர்வமான பயணத்தைப் பின்தொடர்கிறது.
நூறு சாமி
ஜீ5யில் (ZEE5) நேற்று வெளியான இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் உணர்ச்சிப் போராட்டம் நிறைந்த இத்திரைப்படம், நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தாய் மற்றும் மகனுக்கு இடையேயான ஆழமான பந்தத்தை ஆராய்கிறது.

ஆபரேஷன் சேஃபாத் சாகர்
இந்தத் திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில், நேற்று வெளியாகியது. தியா மிர்சா, ஜிம்மி ஷெர்கில், சித்தார்த் மற்றும் அபய் வர்மா ஆகியோர் நடித்துள்ள இந்த ஹிந்தி போர் த்ரில்லர் படம், 1999ல் நடந்த கார்கில் போரின் போது இந்திய விமானப் படை நடத்திய ‘ஆபரேஷன் சேஃபாத் சாகர்’ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தொடர் ‘கோல்டன் ஏரோஸ்’ ஸ்குவாட்ரனின் தைரியத்தையும் தியாகத்தையும் முன்னிலைப்படுத்துகிறது.
தி சூப்பர் மரியோ கேலக்ஸி மூவி
இந்தத் அனிமேஷன் திரைப்படம் பிரைம் வீடியோ & ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 7ம் தேதி வெளியாகியது.
கிறிஸ் பிராட், அன்யா டெய்லர்-ஜாய் மற்றும் ஜேக் பிளாக் ஆகியோர் குரல் கொடுத்துள்ள இந்த அனிமேஷன் ஃபேண்டஸி திரைப்படம், மரியோ, லூயிகி மற்றும் இளவரசி பீச் ஆகியோர் பௌசரின் புதிய திட்டத்தைத் தடுக்க ‘மஷ்ரூம் கிங்டம்’ தாண்டி விண்வெளிக்குச் செல்லும் பயணத்தைப் பின்தொடர்கிறது.
மைன் வாபஸ் ஆவுங்கா
இந்தப் படம் நெட்ஃபிலிக்ஸில் நேற்று வெளியானது. நசீருதீன் ஷா, வேதாங் ரைனா, சர்வரி வாக் மற்றும் தில்ஜித் தோசாஞ்ச் ஆகியோர் நடித்துள்ள இந்த காதல் காவியத் திரைப்படம், 1947 இந்தியப் பிரிவினையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இழப்பும் ஏக்கமும் நிறைந்த பல ஆண்டு கால பழைய காதல் கதையைக் கண்டறியும் ஒரு குடும்பத்தைப் பற்றி இது பேசுகிறது.
பேக்ரூம்ஸ் (Backrooms)
சோனிலிவ்வில் நேற்று வெளியான இந்தப் படத்தில் சிவட்டெல் எஜியோஃபோர் மற்றும் ரெனடே ரீன்ஸ்வே நடித்துள்ளனர். சயின்ஸ்-ஃபிக்சன் ஹாரர் த்ரில்லரான இந்தப் படம், தற்செயலாக நிஜ உலகத்தை விட்டு வெளியேறி, மஞ்சள் விளக்குகள் மட்டுமே எரியும் எல்லையற்ற கைவிடப்பட்ட அறைகளின் பிரமைக்குள் சிக்குபவர்களைப் பற்றியது.

ஃபிளெக்ஸ் எக்ஸ் காப் – சீசன் 1
ஜியோ ஹாட் ஸ்டாரில் நேற்று வெளியான இந்தப் படத்தில் ஆன் போ-ஹியூன் மற்றும் பார்க் ஜி-ஹியூன் நடித்துள்ளனர். இந்த கொரிய குற்றவியல் நாடகம், ஒரு பெரிய வழக்கில் சிக்கிய பிறகு சிறப்பு காவல் புலனாய்வுக் குழுவில் இணையப் போகும் ஒரு பணக்கார வாரிசைப் பின்தொடர்கிறது.

மை லைஃப் வித் தி வால்டர் பாய்ஸ் – சீசன் 3 (My Life with the Walter Boys Season 3)
நெட்ஃபிலிக்ஸில் நேற்று முன்தினம் இந்த வெப் சீரிஸ் வெளியானது. நிக்கி ரோட்ரிக்ஸ் நடித்துள்ள இந்த வெப் சீரிஸின் மூன்றாவது சீசன், ஒரு தனிப்பட்ட சோகத்திற்குப் பிறகு ஒரு பெரிய குடும்பத்திற்கு இடம்பெயர்ந்து காதல், நட்பு மற்றும் குடும்பத்தை கையாளும் ஒரு இளம்பெண்ணின் கதையை மையமாகக் கொண்டது.





