கோவை: கோவை குட்ஸ் செட் ரோடு மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிளை மேடான பாதையில் கொண்டு செல்ல சிரமப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குட்ஸ் செட் ரோடு மேம்பாலத்தில் இன்று காலை மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர சைக்கிளை கைகளால் இயக்கியபடி மேம்பாலத்தில் ஏற முயன்றுள்ளார். ஆனால் செங்குத்தான ஏற்றம் காரணமாக சைக்கிளை நகர்த்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மாற்றுத்திறனாளியின் நிலையை கவனித்து உடனடியாக உதவ முன்வந்துள்ளார். தனது ஆட்டோவை மெதுவாக இயக்கியபடியே, ஒரு காலால் மூன்று சக்கர சைக்கிளை பின்புறமாகத் தள்ளி, அவர் மேம்பாலத்தின் ஏற்றத்தை கடக்க உதவியுள்ளார்.
பிறரின் சிரமத்தை உணர்ந்து, அவசரத்திலும் மனிதநேயத்துடன் ஆட்டோ ஓட்டுநர் செய்த இந்த உதவி அப்பகுதியில் இருந்தவர்களை நெகிழச் செய்துள்ளது.
VIDEO
இந்த சம்பவத்தை அங்கு சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், “இதுதான் நம்ம கோவை மனிதநேயம்” என்றும், கோவை ஆட்டோ ஓட்டுநரின் உதவி மனப்பான்மையை பாராட்டியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.





