கோவை : கோவை செட்டிபாளையம் அருகே மேற்கு வங்க தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் திரிபுராவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்
கோவை செட்டிபாளையம் அருகே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் குழிக்குள் புதைக்கப்பட்ட சம்பவத்தில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செட்டிபாளையம் அடுத்த ஒத்தக்கால் மண்டபம் தண்ணீர் பந்தல் பகுதியில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் எல்லைச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள குழியில் ஒருவர் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செட்டிபாளையம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், குழியை தோண்டி சடலத்தை மீட்டனர். சடலத்தின் ஒரு கை மட்டும் மண்ணுக்கு வெளியே தெரிந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த இளைஞரின் கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்டிருந்ததுடன், முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட காயங்களும் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாதல் சிட் (24) என்பதும், செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
அவர் தங்கியிருந்த அறையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்களும் தங்கியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் பணிக்கு வராமல் தலைமறைவானதால், போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று சம்பளம் பெற்ற பின்னர் பாதல் சிட் மற்றும் அவருடன் தங்கியிருந்தவர்கள் தண்ணீர் பந்தல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குச் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த சக தொழிலாளர்கள் பாதல் சிட்டை பெல்ட்டால் கழுத்தை இறுக்கியும், கல்லால் முகத்தில் தாக்கியும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக உடலை குழி தோண்டி புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், உடலை முழுமையாக மூடாததால் கை மட்டும் வெளியே தெரிந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் 3 பேர் மட்டுமே கொலையில் ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில், போலீசாரின் விரிவான விசாரணையில் மொத்தம் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த துய்தே ரியாங் (22), சுனில் ராய் ரியாங் (24), கோதோ ராம் ரியாங் (30), சுமித் குமார் (20), ஸ்ராமித் ட்ராங் (35), சந்தோஷ் குமார் (20) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெல்ட் மற்றும் கல் உள்ளிட்ட தடயப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை செட்டிபாளையம் அருகே மேற்கு வங்க தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் திரிபுராவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 36 நாட்களில் கோவையில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





