கோவை : கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மாணவர் மோதல்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறையின் ‘எஜிகேஷன் பஸ்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாநகர காவல்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ‘எஜிகேஷன் பஸ்ட்’ என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பது, மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களை தடுப்பது மற்றும் கல்வி நிறுவனங்களுடன் காவல்துறையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில், கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரி நிர்வாகத்துடன் போலீசார் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என கமிஷனர் அறிவுறுத்தினார். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்று, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களை நல்வழிப்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையில் இருந்து அவர்களை பாதுகாத்தல், போதைப்பொருள் தொடர்பான தகவல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் உள்ளிட்ட பணிகளில் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கல்லூரிகளில் செயல்பட்டு வரும் ‘ஆன்டி டிரக்ஸ் கிளப்’ மூலம் மாணவர்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த தகவல்களை பெற்று, அவற்றை காவல்துறையுடன் ஒருங்கிணைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து கல்லூரிக்கு வராத மாணவர்கள், வருகைப் பதிவில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையான தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கமிஷனர் கூறினார்.
ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் தொடர்பாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் கலந்தாய்வு செய்தனர்.
இந்தக் கூட்டத்தில் துணை கமிஷனர்கள் மற்றும் அனைத்து சரக உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





