கோவை : போலி அடையாள அட்டை மற்றும் சம்பள ஆவணங்களை தயாரித்து, வங்கியில் ரூ.25.50 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு தலா 3½ ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் இருமத்தூரை சேர்ந்தவர் வினோத்குமார் (44). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் ஈரோட்டில் உள்ள பள்ளியில் பணியாற்றுவது போல் போலி அடையாள அட்டை மற்றும் போலி சம்பள பில்களை தயாரித்துள்ளார்.
இந்த போலி ஆவணங்களை பயன்படுத்தி, கடந்த 2021-ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் ரூ.13.50 லட்சம் தனிநபர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இதேபோல், சேலம் மாவட்டம் கனவாய்புதூரை சேர்ந்த நித்திலன் (40), தர்மபுரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரும் ஈரோடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றுவது போல் போலி ஆவணங்களை தயாரித்து, எஸ்பிஐ வங்கி கிளையில் ரூ.12 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
கடன் பெற்ற பின்னர், இருவரும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருக்க, 3 மாதங்களுக்குப் பிறகு தங்களது சம்பளக் கணக்குகளை வேறு வங்கிகளுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கடன் தொகையை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய முடியாததால், வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து வங்கி நிர்வாகம் நடத்திய விசாரணையில், இருவரும் வங்கியில் சமர்ப்பித்திருந்த அடையாள அட்டை மற்றும் சம்பள ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2024-ம் ஆண்டு வங்கி நிர்வாகம் சார்பில் சிபிஐ போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 2025-ம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட வினோத்குமார் மற்றும் நித்திலன் ஆகியோர் தங்களது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தாமதமாகாமல் இருக்க, சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞரை நியமித்து வாதங்களை கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார், இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞர் ஸ்டாலினை நியமித்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதங்களை முன்வைத்தார்.
அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து வினோத்குமார் மற்றும் நித்திலன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகுமார் தீர்ப்பளித்தார்.
மேலும், இருவருக்கும் விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரத்தை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகி வழக்கை நடத்தி வந்த இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞருக்கு கட்டணமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.





