கோவை : கோவை புளியகுளம் பகுதியில் பாரில் பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், பார் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டிராஜன் (39), கோவையில் தங்கி புளியகுளம் பாலாஜி நகரில் உள்ள பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மதியம் பாருக்கு வந்த வாலிபர் ஒருவர், பாண்டிராஜனிடம் பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே மதுபானம் வழங்க முடியும் என பாண்டிராஜன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பாண்டிராஜனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் பெரிய ரவுடி என கூறி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற அவர், சிறிது நேரத்தில் மீண்டும் பாருக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த பாண்டிராஜனை திடீரென காலரைப் பிடித்து இழுத்த அந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,150-ஐ பறித்துச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டிராஜன் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாண்டிராஜன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பார் ஊழியரை ரவுடி என மிரட்டி கத்திமுனையில் பணம் பறித்தது அம்மாகுளத்தைச் சேர்ந்த அவி வினோத் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவி வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.





