கோவை: தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பக்தி உணர்வே தமிழர்களின் தனித்துவமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படையாக இருப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பத்துமலையில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற்ற மஹாசத்சங்கம் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். இதில் மலேசியா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, உலகின் பல்வேறு நாடுகளில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களில் தமிழர்களின் ஈடுபாட்டையும் தெம்பையும் தனித்துவமாக அடையாளம் காண முடியும் என்றும் குறிப்பிட்டார். ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் 50 பேர் தமிழ் தன்னார்வத் தொண்டர்களாக இருந்தால்கூட, அவர்களிடம் வெளிப்படும் ஈடுபாட்டின் மூலம் தமிழர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றார்.
தமிழர்களின் இந்தத் தன்மைக்கு அவர்களின் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பக்தி உணர்வே காரணம் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் கலாச்சாரத்தில் கோயில்களும் வழிபாட்டு மரபுகளும் முக்கிய இடம் வகிப்பதாகத் தெரிவித்தார்.
மரம், மாடு, பாம்பு, மலை, மேகம் உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு அம்சங்களையும் மனிதர்களையும் வணங்கும் மரபு, படைப்பின் அனைத்திலும் ஒரு பொதுவான உணர்வைக் காணும் கலாச்சாரப் பார்வையை வெளிப்படுத்துகிறது என்றார்.
ஆன்மீக வளர்ச்சிக்கு பல்வேறு வழிகள் இருப்பதாகக் கூறிய சத்குரு, அறிவு மற்றும் சக்தியின் மூலம் வளர்ச்சியை அடைய முயற்சிக்கலாம் என்றும், பக்தி என்பது அனைவருக்கும் பொதுவான எளிய வழி என்றும் தெரிவித்தார். மனிதனின் உடல், மனம், அறிவு, சக்தி ஆகியவற்றைக் கடந்து உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்த அவர், உணர்வை இனிமையான நிலைக்குக் கொண்டுசெல்வதே பக்தி என விளக்கினார்.
ஞானத்தின் பாதையில் பயணிக்க கூர்மையான அறிவும், சக்தியின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த தீவிரமான சாதனையும் தேவைப்படலாம். ஆனால் பக்திக்கு அதிக நேரமோ பெரிய சடங்குகளோ அவசியமில்லை. ஒருவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமே பக்தியை அனுபவிக்க முடியும்.
கடவுளை மட்டுமின்றி, மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றியுள்ள படைப்புகள் அனைத்தையும் பக்தியுடன் அணுக முடியும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய சத்குரு, பதின்ம வயதினர் தெம்புடனும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டிய நிலையில், குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இது தனிப்பட்ட குழந்தைகளின் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படக் கூடாது என்றும், சமூகத்தைச் சரியாக வழிநடத்துவதில் உள்ள குறைபாடுகளையும், அதன் பின்னணியில் உள்ள அடிப்படைக் காரணங்களையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்
இதற்கு முன்னதாக, அக்டோபர் 7-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற “விழிப்புணர்வான உலகைக் கட்டமைத்தல்” என்ற நிகழ்ச்சியிலும் சத்குரு உரையாற்றினார். இதில் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் மண் வளத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சத்குரு, ஐ.நா. அமைப்புகள் பூமியில் இன்னும் 60 அறுவடைக் காலங்களே எஞ்சியுள்ளதாகக் கூறுவதாகத் தெரிவித்தார்.
தற்போதைய மண் வளச் சீரழிவு தொடர்ந்தால், அடுத்த 40 முதல் 45 ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
நாம் தற்போது நமக்கான உணவை மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையினருக்குச் சொந்தமான உணவு வளத்தையும் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மண் வளத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் மலேசியாவுக்கான மண் வளக் கொள்கை உருவாக்கப்பட்டு அந்நாட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்தக் கொள்கையைப் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கொண்டு சேர்த்து, தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலம் படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
உலகின் 192 நாடுகளுக்கான மண் வளக் கொள்கைகளை உருவாக்க 2 முதல் 2.5 ஆண்டுகள் ஆனதாகவும், ஒவ்வொரு நாட்டின் நில அமைப்பு, மண்ணின் தன்மை, பொருளாதாரச் சூழல் மற்றும் விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப அவை வடிவமைக்கப்பட்டதாகவும் சத்குரு குறிப்பிட்டார். அவற்றில் 72 முதல் 74 நாடுகள் வரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சத்குருவின் மலேசியப் பயணத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 11-ஆம் தேதி ‘Soak in the Ecstasy of Enlightenment’ என்ற ஒருநாள் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சத்குருவின் வழிகாட்டுதலில் தியானம் மற்றும் யோகா மூலம் ஆன்மீகத்தின் ஆழமான பரிமாணங்களை அனுபவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






